சென்னையில் காதல் விவகாரதிதில் இளைஞர் கடத்தல் வழக்கில், புரட்சி பாரதம் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் ஏடிஜிபி-யை கைது செய்ய நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.
வழக்குப் பதிவு :
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாவில் பழக்கமான தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், கூலிப் படையை ஏவி, கடந்த 6-ம் தேதி தனுஷின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு, அங்கிருந்த தனுஷின் சகோதரனையும் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து இளைஞரை வீட்டில் விட்டுள்ளனர் கூலிப் படையினர். இது தொடர்பாக தனுஷின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக இருந்ததாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி மீதும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பூவை ஜெகன்மூர்த்தி உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பூவை ஜெகன்மூர்த்தியை விசாரணைக்காக அழைத்து செல்ல பூந்தமல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்ற போது, புரட்சி பாரதம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் மனு:
பூவை ஜெகன்மூர்த்தி வீட்டில் இல்லாததால், போலீசார் திரும்பிய நிலையில், தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் இருந்து தனக்கு முன் ஜாமின் வழங்கக் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தார். இதற்கு தலைமை நீதிபதி அனுமதி அளித்ததை தொடர்ந்து வழக்கு நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதம் :
இன்று (16.06.2025) காலை வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அப்போது, ஜெகன்மூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகர், மனுதாரருக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பொய்யான வழக்கு. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ஜெகன்மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்த சம்பவத்தில் காவல்துறை ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவருடைய வாகனம் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் வாதிட்டார். வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு ஆரம்ப கால தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது என்றும், எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்றும் அப்போது இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் ஏடிஜிபி ஜெயராம் நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏடிஜிபியை கைது செய்ய நீதிபதி உத்தரவு:
இதனை தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் மற்றும் பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆகினர். அப்போது நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் மனுவை ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இளைஞரின் தாய் வீடியோ வைரல்:
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட தனுஷின் தாயார் லட்சுமி பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில், அவர் இந்த கடத்தலுக்கும் பூவை ஜெகன்மூர்த்திக்கும் தொடர்பு இல்லை எனவும், ஏன் போலீசார் அவரை கைது செய்ய முயல்கிறார்கள் என கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.