திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.1கோடி நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன். இவருக்கு உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் மூங்கில்தொழிவு பகுதியில் தென்னை மரத் தோட்டம் ஒன்று உள்ளது. இந்தத் தோட்டத்தை மூர்த்தி என்பவர் குடும்பத்துடன் சேர்ந்து பராமரித்து வந்துள்ளார்.
தோட்டத்தில் பணியாற்றி வந்த மூர்த்தி மற்றும் அவரது மகனுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட குடிமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது மதுபோதையில் இருந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து வந்த போலீசார், சண்முகவேலின் உடலை கைப்பற்றியதோடு, தப்பியோடியவர்களை தேட 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளான மூர்த்தி மற்றும் அவரது மகன்கள், சமீபத்தில் தனது தோட்டத்தில் பணிக்கு சேர்ந்திருப்பதாகவும், அவர்கள் யாரென்றே தனக்குத் தெரியாது எனவும் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் கூறியிருக்கிறார். இந்த நிலையில், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் திரு. அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.
சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் கூறியிருக்கிறார்.