தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கோவை குற்றாலம் மற்றும் வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சித்திரைச்சாவடி, குனியமுத்தூர், புட்டுவிக்கி தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளலூர் தரைப்பாலத்தையும் மூழ்கடித்தபடி நொய்யல் ஆற்றின் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நொய்யல் ஆற்றின் நீர் ராஜவாய்க்கால் மூலம் குளங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதால், சுற்றுவட்டாரக் குளங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கிருஷ்ணாபதி குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், சிங்காநல்லூர் குளம், இருகூர் குளம் ஆகியவை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. பேரூர் பெரியகுளம், வாலாங்குளம், உக்கடம் நீலாம்பூர் குளம், சூலூர் பெரியகுளம், சூலூர் சின்னகுளம் என ஆறு குளங்கள் 90 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியுள்ளன.
இதையும் படிக்க: செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது உயிரிழந்த கணவர்: ₹30 லட்சம் இழப்பீடு கோரி மனைவி மனு!!
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு திறக்கப்பட்டதால் நீர்வரத்து அதிகமாக உள்ளது. பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் அங்கு மீன் பிடித்து, குளித்து விளையாடி வருகின்றனர். இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையும் பல்வேறு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் அணைக்கட்டுப் பகுதியில் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். எனவே, உடனடியாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.