மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாகவும், இந்தியாவிலேயே 11.19% பொருளாதார வளர்ச்சியோடு இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) சார்பில் இன்று முதல் 3 நாட்கள் வரை நடைபெறும் “AeroDefCon25” கண்காட்சி மற்றும் கருத்தரங்கை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறை சார்ந்த இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் முதல்முறையாக தொடங்கி வைத்துள்ளதாகவும், அனைத்து விதமான வளர்ந்து வரும் தொழில்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் அடையாளம் தான் இந்த மாநாடு.

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக கூறிய அவர், இந்தியாவிலேயே 11.19% பொருளாதார வளர்ச்சியோடு இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் துறை இடம்பெற்றிருக்கும் நகரங்களில் பல தொழில் தொடங்கப்பட்டுள்ளது. சூலூரில் 200 ஏக்கரில் வாண்வெளி பூங்கா அமைக்கப்பட்டு வருவதோடு, சென்னைக்கு அருகில் வள்ளம் வடகாலில் aerohub திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது.

தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தட திட்டத்தை தொடங்கியதில் இருந்து சுமார் 23 ஆயிரம் கோடி முதலீட்டுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதில், சுமார் 5 ஆயிரம் கோடி முதலீடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளது, 2032-ஆம் ஆண்டிற்குள் 75,000 கோடி ரூபாய் இலக்கை அடைய தமிழ்நாடு முன்னேறி வருகிறது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீட்டுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. இந்திய தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் திறமையான இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர், பன்னாட்டு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய காத்திருக்க வேண்டியதில்லை” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா, தொழில்துறை செயலாளர், TIDCO நிர்வாக இயக்குனர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version