சாதிய உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் இல்லாமல் மாணவர்களை நீங்கள் (ஆசிரியர்கள்) தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் டெக்னாலஜி மட்டுமே நம்பி இருக்கக்கூடிய தலைமுறையாக நமது மாணவர்கள் மாறிவிடக்கூடாது, அறிவான தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சென்று அதை மேம்படுத்தக்கூடிய பணி ஆசிரியர்களுக்கு தான் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினையும், பயிற்சிக் கையேட்டினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் ரூபாய் 277 கோடி மதிப்பீட்டில் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் ரூபாய் 94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களையும் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது
நாம் வாழும் சமூகத்தை கட்டமைக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். முப்பெரும் என சொல்லி ஐம்பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் அன்பில் மகிழ்ச்சி பொய்யாமொழிக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். மாணவர்களுக்கு தான் ஆசிரியர்கள் தான் பாடம் எடுப்பார்கள். ஆனால் தனது வரவேற்புரை உரை மூலம் ஆசிரியர்களுக்கு பாடம் எடுத்துள்ளார் நமது அன்பின் மகேஸ் பொய்யாமொழி. ஆசிரியர்கள் என்பவர் பாடப்புத்தகத்தில் மட்டும் இருப்பதை சொல்லிக் கொடுப்பவர் இல்லை. தனது வாழ்க்கை சமூகப் பாடகங்களை சொல்லிக் கொடுப்பவர் என தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் தனது வகுப்பறைக்கு நுழையும் பொழுது ஆசிரியர்கள் உங்களது முன்னாடி இருப்பவர்கள் பாடம் கற்றக்கூடிய மாணவர்கள் அல்ல எதிர்கால டாக்டர்கள், என்ஜினியர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள், விஞ்ஞானிகள். நாட்டுடைய தலையெழுத்தை தீர்மானிக்கும் அரசியல் தலைவர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
இன்று நாம் இருக்கக்கூடிய சூழ்நிலையில் பாடம் எடுப்பதில் எளிதாக மாறி உள்ளது. நாங்கள் படித்த போது பரந்துப்பட்ட வாழ்க்கை தேடலுக்கு அதிகம் தேவை. தேவையற்ற குப்பைகளும் தற்போது அதிகமாக உள்ளது. தொழில்நுட்பத்தை நாம் குற்றம் சொல்ல முடியாது நம் குழந்தைகளுக்கு நாம் தான் சரியான விஷயத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்து இருக்கக்கூடிய மாணவர்களாக நாம் இருக்கக் கூடாது. எது வேண்டாலும் கூகுள் மட்டும் AIயிடம் கேட்டுக்கொள்ளலாம் என இருக்கக்கூடாது. மாணவர்களுக்கு பாட புத்தகங்களோடு இலக்கியம் பொது தகவல், சமூக ஒழுக்கம், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, காலநிலை மாற்றம் குறித்த தெளிவு மாற்று எரிசக்தி தேவைகள் அதைப்பற்றி நீங்கள் உரையாடு புரிய வைக்க வேண்டும்.
மாணவர்களிடம் நீங்கள் நட்பாக பழக வேண்டும். youtube தளத்தில் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு எளிமையான முறையில் கணக்கு சொல்லிக் கொடுக்கும் விதம் பார்த்துள்ளேன் அது குறித்து நீங்களும் சொல்லிக்கொடுக்கலாம். இன்று நீங்கள் விதைக்கக்கூடிய நல்ல விதைகள் நம்முடைய சமூகத்தில் நாளை உழைக்கப்போகிறது. மாணவர்களுக்கு எந்த அளவு அறிவாற்றல் முக்கியமோ அந்த அளவுக்கு உடல் நலமும், மன நலமும் முக்கியம் மாணவர்களுக்கு அதிகமான மன அழுத்தத்தை ஆசிரியர்கள் கொடுக்கக் கூடாது.
அன்பாக பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும் அப்படி சொல்லிக் கொடுத்தால் அவர்கள் நிச்சயமாக கேட்டுக்கொள்வார்கள். மாணவர்கள் அனைவரையும் நீங்கள் ஒரே அளவுகோலுடன் அளக்கக்கூடாது. அவர்களது 2-வது பெற்றோர் தான் ஆசிரியர்கள் என கூறினார்.
திமுக ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் கல்வி சூழலில் மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது. அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்கிறோம்.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பசியோடு மாணவர்கள் இருக்கக்கூடாது என்பதற்காக சூடான சுவையான சத்துணவு காலை உணவாக வழங்கி வருகிறோம். ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்தி சொல்ல அத்தனை சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளோம். கல்வி தொடர்பாக நீங்கள் செய்யக் கூடிய பணிகளை தாண்டி மாணவர்களுக்கு சாதி பாலின பாகுபாடு ஒன்றிய பிற்போக்கு தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் ரோல் மாடலாக இருக்க வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர்கள் மனசு விட்டு பேச வேண்டும். நூலகம் மற்றும் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். உங்களது ஆசிரியர் பணி சிறக்க நான் மனதார அன்போடு வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என தெரிவித்தார்.