சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்திலிருந்து அடியனூத்து வரை 19.5 கி.மீ மாநில சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை மதுரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் பல்வேறு விவசாயம் நிலங்கள் சாலை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தி சாலை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2018 தமிழக அரசு நில எடுப்பு சட்டத்தின் படி விவசாய நிலத்திற்கு இழப்பீடு அரசு வழங்க முடிவெடுத்துள்ளனர். இதன்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.3 லட்சம் மற்றும் கிணற்றிற்கு ரூ. 30 ஆயிரம் அளவிலான மட்டுமே தமிழக அரசு இழப்பீடாக வழங்குகிறது. ஆனால் 2013ஆம் ஆண்டு மத்திய அரசின் சட்டத்தின்படி இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 26 ஆம் தேதி மனு அளித்தனர்.
ஆனால் தற்போது வரை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாததால் கோவுகவுண்டன்பட்டி அருகே சாலைவேலைகளை நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது, சாலை பணி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்ட தடுப்பு வேலிகளை தூக்கி எறிந்தும், ரோடு ரோலர் வாகனத்தை மறித்தும், திண்டுக்கல் – சிலுவத்தூர் நெடுஞ்சாலையை மறைத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண் விவசாயி ஒருவர் ஆவேசத்தில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை அடுத்து வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட 1 மணி நேரத்திற்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.