1988ஆம் ஆண்டு திண்டுக்கல் – கரூர் ரயில் பாதைக்கு இடம் கொடுத்தவருக்கு இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட 12 பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் சாரங்கபாணி (வயது 70), சவுந்தரராஜன் (60). இவர்களுக்கு சொந்தமான நிலம், கடந்த 1988ஆம் ஆண்டு திண்டுக்கல்-கரூர் ரெயில் பாதை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டது.
இதற்காக ரூ.1 கோடியை இழப்பீட்டு தொகையாக அரசு நிர்ணயம் செய்தது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த தொகை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காலக்கெடு முடிந்தும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து சாரங்கபாணி, சவுந்தரராஜன் குடும்பத்தினர் திண்டுக்கல் முதன்மை சப்-கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, அரசு நிர்ணயித்த இழப்பீட்டு தொகையை வட்டியுடன் ரெயில்வே துறையில் இருந்து வசூலித்து மனுதாரர்கள் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதன் பிறகும் மனுதாரர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2011-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது 3 மாத காலத்துக்குள் மனுதாரர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டது. இதையடுத்து ரூ.42 லட்சம் இழப்பீட்டு தொகையாக சாரங்கபாணி, சவுந்திரராஜன் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு மீதித்தொகையான ரூ.58 லட்சம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இழப்பீட்டு தொகையை உடனே வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி திண்டுக்கல் முதன்மை சப்-கோர்ட்டில் மனுதாரர்கள் சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகும் இழப்பீட்டு தொகை கிடைக்காததால் மனுதாரர்கள் தரப்பில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டு ஊழியர்கள் மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பொது பிரிவு அலுவலகத்தில் உள்ள 100 மர மேஜைகள், 150 மர நாற்காலிகள், 50 கம்ப்யூட்டர்கள், 15 தட்டச்சு எந்திரங்கள், 100 மின்விசிறிகள், 3 கார்கள் உள்பட மொத்தம் 12 பொருட்களை ஜப்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதை அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரெயில்வே நிர்வாகத்திடம் இழப்பீடு தொகை பெற்று தருவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். இதனால் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.