விழுப்புரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்திக்கு மாற்ற போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் இரங்கநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, நண்பர் என்ற முறையில் தேர்தல் செலவிற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாயை 5 தவணைகளாக வழங்கினேன். தேர்தல் முடிந்ததும் 2023ம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் என 5 காசோலைகளை வழங்கினார். ஆனால், காசோலையில் பணம் இல்லை என திரும்பவிட்டது.
இதையடுத்து, பணத்தை திரும்பி உத்தரவிடக்கோரி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாக்டர் லட்சுமணன் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், திமுக மாவட்ட செயலாளராகவும் இருப்பதால் வழக்கு விசாரணை சரியாக நடத்தவில்லை. விசாரணை நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் லட்சுமணன் எடுத்துள்ளார். அதனால், விசாரணையை விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு மாற்ற வேண்டும். அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணையில் உள்ளது. அப்போது, எம்.எல்.ஏ லட்சுமணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 50 லட்சம் மட்டுமே 2021ல் வாங்கப்பட்டது. 2.5 கோடி ரூபாய் என்பது உண்மையில்லை. நண்பர்களிடம் கடனாக வாங்கி கொடுத்தற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. 50 லட்சம் ரூபாய்க்கு வழங்கிய 5 காசோலைகளை 2.5 கோடி ரூபாய்க்கு மாற்றியுள்ளார்.
பணத்தை திருப்பி தர சமரச பேச்சுவார்த்தைக்கு மனுதாரர் முன்வரவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவின் படி விசாரணை விரைவு படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. இந்த வழக்கு தனது தற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே தொடரப்பட்டுள்ளது. அதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஏற்கனவே உயர்நீதிமன்றம் 1 வருடத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. போதுமான ஆதரங்கள் இல்லாமல் வழக்கை மாற்ற முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
