திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோருக்கு அவதூறு வழக்குகளில் சிறை தண்டனை கிடைப்பது உறுதி என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
திமுக பைல்ஸ் என்ற பெயரில் அந்த கட்சியின் முன்னணி தலைவர்களின் சொத்து விவரங்களை பா.ஜ.க., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில், முன்னாள் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் சொத்து விவரங்களையும் வெளியிட்டார். அவருக்கு 21 நிறுவனங்கள் உள்ளதாக கூறியிருந்தார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், அவதூறு பரப்புவதாகவும் கூறி அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் டி ஆர் பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை மேற்கொண்டார் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்த நிலையில் அண்ணாமலை நேரில் ஆஜரானார். அப்போது ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக தான் தொடர்ந்த அவதூறு வழக்கில் முக்கிய சாட்சியங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது; பொய் புகார்களைக் கூறி தப்பிக்க முயலும் திமுக தலைவர்கள் விரைவில் சிறைக்குச் செல்வார்கள்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பாஜக சதித்திட்டம் தீட்டியதாக ஆர்.எஸ். பாரதி பேசியிருந்தார். இந்த அவதூறான பேச்சு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி அண்ணாமலை வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
