கோவை மகளிர் நீதிமன்றம், தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், 9 பேருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்தது பெரும் வரலாற்றுச் சிறப்புடைய தீர்ப்பாகும். இந்த தீர்ப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது அறிக்கையில் வரவேற்றுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
“இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த பெரும் ஆறுதலாகும். அச்சுறுத்தல்களுக்கும், அரசியல் அழுத்தங்களுக்கும் மத்தியிலும், துணிவுடன் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த பெண்களின் செயல்பாடு மிகவும் போற்றத்தக்கது.”
அத்துடன், “அண்ணா… அடிக்காதீங்கண்ணா…” என கதறிய அந்தக் குரலும் இன்னும் நெஞ்சை பதற வைக்கிறது என்றும், அவளின் அண்ணனாக இந்த தீர்ப்பை ஏற்கிறேன் என உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் இரட்டைநடைக்கு கண்டனம்:
சீமான், இவ்வழக்கில் குற்றவாளிகளைத் தவிர, அப்போது ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். காவல்துறையும், அதிகாரிகளும் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தனர் என்றும், அரசியல் அழுத்தம் வந்த பிறகே வழக்கு CBI-க்கு மாற்றப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேவேளை, தற்போது திமுக ஆட்சியில் நடந்த அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாகவும், “யார் அந்த சார்?” என மக்கள் கேட்கிறார்கள்; ஆனால் பதில் தராமல் அதிகாரப்புள்ளிகளை பாதுகாக்கும் திமுக அரசு இந்த விவகாரத்தில் பேச தார்மீக உரிமை கொண்டதல்ல” என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு – ஒரு எச்சரிக்கை:
சீமான், இந்த நீதிமன்ற தீர்ப்பு, பெண்களை வன்முறைக்கு உள்ளாக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு “பாடம்” மற்றும் “எச்சரிக்கையாக” அமையவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மேல்முறையீடு வழக்குகளில் இந்த தீர்ப்பு நீர்த்துப் போகாமல் வலுவான சட்டப்போராட்டங்களை மேற்கொள்வது அவசியம் என்றும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமைகளை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.