சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
1970-களில் சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் சென்னையில் வெற்றிகரமாக இவ்வகை பேருந்துகள் இயக்கப்பட்டது. பிறகு 1980-களில் இரட்டை அடுக்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பிறகு 1997- ஆண்டு மீண்டும் பேருந்துகள் சென்னையில் ஓடத் தொடங்கியது.
10 ஆண்டுகளுக்கு மேல், இரட்டை அடுக்கு பேருந்துகள் சென்னையில் பிரபலமாக ஓடியது. கடைசியாக உயர்நீதிமன்றம் – தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு இவ்வகை பேருந்துகள் நிறுத்தப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை நகரச் சாலைகளில் ஒரு காலத்தில் பயணிகள் மிகவும் விரும்பிப் பயணம் செய்த இரட்டை அடுக்கு பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் இயக்கப்பட உள்ளன. இந்த முறை அவை தினசரிப் பயணத்துக்கு மட்டுமல்லாமல், சென்னை நகரச் சுற்றுலாவுக்கும் பயன்படுத்தப்பட உள்ளன. சுற்றுலா செல்வதற்கு பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.முதல் கட்டமாக 20 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் வார நாட்களில் பயணிகளுக்கு அதிக தேவை உள்ள வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை நகரச் சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்த பேருந்துகள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இயக்கப்படும். வழித்தடத் திட்டமிடல் மற்றும் கட்டண நிர்ணயம் ஆகியவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இரட்டை அடுக்கு மின்சாரப் பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. சாதாரண மின்சாரப் பஸ்களைவிட 1.5 மடங்கு அதிகமாக, கிட்டத்தட்ட 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. சென்னையில் மாநகரப் பஸ்களில் அடிக்கடி நெரிசல் காணப்படும் நிலையில், அதிக தேவை உள்ள வழித்தடங்களில் இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.