முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசியல் சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட அரசியலில் ஒரு முக்கிய மாற்றம் நிகழப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபாசப் பேச்சு மற்றும் சொத்துக் குவிப்பு விவகாரங்களால் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பொன்முடி நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி, தனது வாரிசை முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, பொன்முடியின் மகனும் முன்னாள் எம்.பி-யுமான கௌதம சிகாமணி, வரும் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறங்குவார் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. கௌதம சிகாமணி ஏற்கனவே கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பிரதிநிதியாக இருந்த அனுபவம் கொண்டவர் என்பதால், பொன்முடிக்குப் பதில் இவரைத் தேர்ந்தெடுப்பது தொகுதிக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என உள்ளூர் திமுக நிர்வாகிகள் கருதுகின்றனர். பொன்முடி மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களைச் சமாளிக்க இது ஒரு வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திருக்கோவிலூர் தொகுதி முழுவதும் ‘வெற்றி வேட்பாளர் கௌதம சிகாமணி’ என்ற வாசகங்களுடன் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சித் தலைமை இன்னும் வேட்பாளர் பட்டியலை முறைப்படி அறிவிக்காத நிலையில், இப்போதே விளம்பரம் செய்வது சர்ச்சையைத் தூண்டும் என்பதால், அந்தச் சுவர் விளம்பரங்கள் தற்போது அவசர அவசரமாக அழிக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் கௌதம சிகாமணிக்கு சீட் கிடைப்பது உறுதி என்பதை உறுதிப்படுத்தினாலும், மறுபுறம் திமுக தலைமை இந்த முன்கூட்டிய அறிவிப்பால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version