டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..
சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் பல்வேறு வீடுகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாசாலை, பெசண்ட் நகர், தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தியாகராய நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளின் வீடுகளை குறிவைத்து அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறையினர் சோதனையை தொடங்கி உள்ளனர். பாதுகாப்பு கருதி மத்திய ரிசர்வ் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்என்ஜே மதுபான நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளை சோதனை மேற்கொண்டு ஆவணங்களை திரட்டி வருகின்றனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கடந்த 10 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறையில் தொடரப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அமலாக்கத்துறை வெளியிட்ட செய்தி குறிப்புகளின்படி, பணியிடமாற்றம், போக்குவரத்து டெண்டர், பார் உரிமம் டெண்டர், சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமான ஆர்டர்கள், பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 அதிகமாக வசூலித்தது போன்ற குற்றங்களுக்கான தரவுகள் கிடைத்தாக தெரிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பணிபரிமாற்றம் நடைபெற்று இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக குற்றஞ்சாட்டியது.
இதன் நீட்சியாகவே இன்று டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தனுஷின் இட்லிக்கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் என்பவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சாதாரண நபராக வலம்வந்த ஆகாஷ் பாஸ்கரன் எப்படி திடீரென்று பல்லாயிரம் கோடிகளில் புரள்கிறார் என்ற கேள்வியோடு இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.