தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடியிடம் 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, மாலத்தீவில் இருந்து நேற்று இரவு தூத்துக்குடி வந்தடைந்தார். அங்கு விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். இரவு 10 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற பிரதமர் அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார்.
தொடர்ந்து இன்று காலை கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் பிரதமர் ரோடு-ஷோ நடத்தவுள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்லும் மோடி, புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலுக்கு செல்லவுள்ளார்.
இதற்கிடையில் திருச்சியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது மோடியிடம் 3 கோரிக்கைகள் அடக்கிய மனுவை வழங்கியுள்ளார். அதில், ”விவசாயிகளுக்கான சிபில் ஸ்கோர் நடைமுறையிலிருந்து விலக்களிக்க வேண்டும். தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் ராணுவ வழித்தடத்தை அமைக்க வேண்டும். ராணுவ தளவாடத்தை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும். கோதாவரி-காவேரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக வழங்கியதாக கூறப்படுகிறது.
பிரதமருடனான இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.