எஸ்ஐஆர் படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

பிகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியது. அதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக சென்று எஸ்ஐஆர் விண்ணப்பங்களை வழங்கினர். நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய எஸ்ஐஆர் பணிகள், டிசம்பர் 14 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.

தொடர்ந்து, டிச.19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் இறந்தவர்கள், குறிப்பிட்ட முகவரியில் இல்லாதவர்கள், குடிபெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவுகள் என 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை, தற்போது 5.43 கோடியாக குறைந்துள்ளது. அதாவது, மொத்த எண்ணிக்கையில் 15.18% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பிகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் – இடம் மாறியவர்கள் படிவம் 8-ஐயும், புதிதாக சேருபவர்கள் படிவம் 6-ஐயும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18 ஆம் தேதிக்குள் இணைத்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக, சென்னையில் சிறப்பு முகாம்களும் நடந்தன.

இதனிடையே, படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எஸ்ஐஆர் படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்து வாக்காளர்களுக்கு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாகவும், இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்கும் வகையில், பிறப்பிட சான்றிதழ், நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அளித்த பட்டியலில் Nativity Certificate என்ற பிறப்பிட சான்றிதழும் இருக்கிறது. இச்சான்றிதழை தமிழக அரசு இ-சேவை வழியாக, ஆன்லைன் மூலம் வழங்கி வருகிறது. அதற்கு கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த பிறப்பிட சான்றிதழ் இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இ-சேவை மையங்களை நடத்தி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கும் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தப்பணி காரணமாக பிறப்பிட சான்றிதழ் வழங்குவது அவசியமாகிறது. எனவே, பிறப்பிட சான்றிதழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், ஜனவரி 25 வரை மண்டல துணை தாசில்தார்கள், தாலுகா துணை தாசில்தார்கள் தங்களது கையால் சான்றிதழ் வழங்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version