டிசம்பர் 18 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் உரையாற்றவுள்ள பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில் பல்வேறு நிபந்தனைகளைம் விதிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு சிறிது காலம் நிறுத்தப்பட்ட விஜய்யின் அரசியல் பிரச்சாரத் திட்டமான ஈரோடு மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறை தாலுகாவில் உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடிக்கு அருகில், விஜயபுரி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு நியமிக்கப்பட்ட இடத்தில் கூட்டம் நடைபெறும். கட்சி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு இடையேயான ஆலோசனைகள், கூட்டத்தின் இயக்கம் மற்றும் போக்குவரத்து மாற்று திட்டங்களை மனதில் கொண்டு, இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் பேரணியை ஏற்பாடு செய்ய அனுமதி கோரி TVK உறுப்பினர்கள் காவல்துறையிடம் முறையான விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர். கட்சி சமர்ப்பித்த தளவாட ஏற்பாடுகள், கூட்ட மேலாண்மை திட்டம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்த பிறகு, ஈரோடு மாவட்ட காவல்துறை இந்த நிகழ்விற்கு ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், தற்போது காவல்துறை தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, விஜய் கலந்து கொள்ளும் பரப்புரை செய்யும் பகுதியில் கட்டாயம் மேற்கூரை அமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விஜய் வரும் நேரம், புறப்படும் நேரம், எந்த வழியில் வருகிறார் ஆகிய விவரங்களை முன்கூட்டியே காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநாடு நடைபெறும் இடத்தில் பட்டாசு, ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டுவர அனுமதி இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் வாகனத்தைத் தொடர்ந்து வரும் 10 வாகனங்களின் பதிவெண் கொண்ட விவரங்களையும் முன்கூட்டியே தர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய்யின் வாகனம் வரும் வழியில் ரோடு ஷோ, வரவேற்பு நிகழ்ச்சி அல்லது ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. பிரச்சார இடத்தில் ஏற்கனவே 80% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய நிபந்தனைகளால் அவ்விடத்தில் மாற்றங்கள் செய்ய தவெக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
