தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கும் மேலாக இரு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் ஏற தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மறுஅறிவிப்பு வரும் வரை பக்தர்கள் மலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும், பரளிக்காடு, பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 வது மலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவரும், 5-வது மலையில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலையேறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.
இருவரின் உடல்களையும் டொலி தூக்கும் தொழிலாளர்களை கொண்டு அடிவாரம் வரை எடுத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மாதம் 21-ம் தேதி மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறிய காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ரமேஷ், கீழே இறங்கும் போது, 6-வது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.