தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் தென்கரைப் பகுதியில் சிறிய அளவில் துணிக்கடை நடத்தி வருகிறார். கடைக்காக வாங்கிய துணிகளை பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் மொத்தமாக சேமித்து வைத்துள்ளார்.
இன்று(26.05.2025) பிற்பகல் சுமார் 3 மணியளவில் துணிகள் வைத்திருந்த அறையில் திடீரென தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீ அறை முழுவதும் பரவியது. தகவலறிந்து வந்த பெரியகுளம் தீயணைப்புத் துறையினர், நீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம் அடைந்ததாக உரிமையாளர் முத்து லட்சுமி தெரிவித்துள்ளார்.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.