முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக தென் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழக எல்லையை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கியின் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்றை விட இன்று மழை சற்றே குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்து 5,135 கன அடியிலிருந்து விநாடிக்கு 3,999 கன அடியாகக் குறைந்தது. ஆனாலும், இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 138.65 அடியிலிருந்து ஒரே நாளில் 139.80 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, இன்று மாலை 6 மணி நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 400 கன அடியிலிருந்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும், அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டி உயர்ந்து வருவது குறித்து முறையே இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு 2-வது எச்சரிக்கை தகவல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, அணை நீர்மட்டம் 140 அடியை எட்டும் போது முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடிக்கு வந்ததும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். ஒருவேளை 142 அடியை எட்டினால் இறுதி அல்லது மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் 13 மதகுகள் வழியாக உபரி நீர் கேரளாவிற்குள் திறந்து விடப்படும்.
அதையடுத்து, கேரளாவிற்குள் உபரி நீர் வெளியேறும் வல்லக்கடவு சப்பாத்து, வண்டிப்பெரியாறு, உப்புத்தரா வழி இடுக்கி அணை வரையிலான முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்படும்.
மேலும், ‘ரூல் கர்வ்’ விதிப்படி, அணையின் நீர்மட்டம் நவம்பர் 30ஆம் தேதி வரையில் 141 அடியாகவும், நவம்பர் 30ஆம் தேதிக்குப் பின் 142 அடியாகவும் (மொத்த உயரம் 152) உயர்த்திக் கொள்ள விதி உள்ளது. அதற்கு மேல் வரும் தண்ணீரை உபரி நீராகக் கேரளாவிற்கு, அவசர கால நீர் வழிப் போக்கிகள் மூலம் வெளியேற்ற வேண்டும் என கடந்த 2014-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை 142 அடிகளாக உயர்த்தும் நடவடிக்கைக்காக, தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்கள் இன்று முல்லைப் பெரியாறு அணையில் முகாமிட்டனர்.
