மன அமைதிக்காக ஹரித்துவார் செல்வதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்து அதிமுகவில் பலகட்ட குழப்பங்கள் நடந்து வருகிறது. பல தலைவர்கள் கட்சியை விட்டு விலகுவதும், அதிமுகவுக்கு எதிராக கருத்துகளை பதிவிடுவதும், அவர்களை கட்சியை விட்டு தலைமை அகற்றுவதுமாக நடந்து வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.
கடந்த 5-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். உடனே அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”நான் கோயிலுக்குச் செல்கிறேன். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வேண்டி கோயிலுக்கு போகிறேன். ராமரை வணங்கிவிட்டு வர வேண்டியதுதான். அனைவரும் ஒன்றாக வேண்டும், கட்சி வளர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். நல்லதுக்காக சொல்கிறோம். அதற்கு பொதுச்செயலாளர் பல்வேறு முடிவுகளை எடுக்கிறார். முடிவுகள் குறித்து கருத்துகள் சொல்ல இயலாது. காலம்தான் பதில் சொல்லும்.
எனது பயணத்தில் பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கப்போவது இல்லை, நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.