திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய பெண் பக்தரின் கால் முறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணகான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று காலை முதல் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. காலை முதலே கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரியப்பம் பாலையத்தை சேர்ந்த சீனிவான் – ராஜாமணி தம்பதி உறவினர்களுடன் கோயிலுக்கு வந்துள்ளனர். கடலில் நீராடிய போது, ராஜாமணியை ராட்சத அலை புரட்டி போட்டு கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் அவரது கால் கடலுக்குள் இருந்த பாறையில் மோதியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பணியில் இருந்த திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீசார், ராஜாமணியை மீட்டு கோயில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.