திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் கருவியையும், 61.29 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி என மொத்தமாக 2.81 கோடி செலவில் உயர் மருத்துவ உபகரணங்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
பின் செய்தியாளர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து கூறும்போது,
“4 வருடத்திற்கு முன்பு சுகாதாரத்துறை மூலம் இயங்கி வந்த 1000 மேற்பட்ட வாடகை கட்டிடங்களும், 1500 க்கு மேற்பட்ட பழமையான கட்டிடங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. தற்போது 1600 புதிய கட்டடங்களை இந்த அரசு திறந்து வைத்துள்ளது.
தடுப்பூசி பணிகளில் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்த கூடாது என பொது சுகாதார துறை செவிலியர் கூட்டமைப்பு சங்கம் கூறியது குறித்த கேள்விக்கு, கொரோனா தடுப்பூசி நாங்கள் போட மாட்டோம் என கூறினார்கள். ஒப்பந்த பணியாளர்கள் அப்போது தடுப்பூசி போட்டனர். தடுப்பூசிகள் யார் வேண்டுமானாலும் போடலாம். அந்தப் பணி இவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. அந்த சங்கத்தினர் இடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசிகள் போடப்படும். பயிற்சி அளித்த பின்பே தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.
திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனைகள் பல திறக்கப்பட்டாலும் அடிப்படை வசதிகள் பல இல்லாமல் இருப்பது குறித்த கேள்விக்கு, திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. 1218 பணியாளர்கள் உள்ளனர். பயன்பாடுகள் அதிகரிக்க, அதிகரிக்க தேவைகள் நிறைவேற்றப்படும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்கள் அமர்வதற்கு போதிய வசதிகள் இல்லை என்பது குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. பல்வேறு இடங்களில் அதிநவீன வசதிகளுடன் செயல்படுகிறது சில இடங்களில் சிறிய கட்டிடங்கள் செயல்பட்டு வருகிறது. அதையும் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மதுரை தோப்பூர் மருத்துவமனையை ஆய்வு செய்தோம் அங்கு சிறப்பாக மருத்துவமனை இருந்தது மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தோம் என்றார்.