நமது இசையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் காப்புரிமையை பெற வேண்டும். அதன் மூலம் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்று ஆளுநர் ரவி கூறினார்.

சென்னை பாரதிய வித்யா பவன் சார்பில் மார்கழி மகா உற்சவம் நடைபெறுகிறது. அதன் துவக்க விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசுகையில், ” தமிழ்நாட்டில் பாரதிய வித்யா பவன் கலாச்சார மையமாக திகழ்கிறது. அதைப் போல, கலைக்களுக்கான மாதமாக மார்கழியை கடைப்பிடிக்கிறோம். உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த கலைகளை காண்பதற்கும், கற்பதற்கும் சென்னைக்கு பலரும் வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் உள்ள தனித் திறமைகளை வளர்ப்பதில் மார்கழி மாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள் தலையீட்டால் கலை மற்றும் கலாச்சாரம் மறைக்கப்பட்டன. அவற்றை நாம் மீட்டு காக்க வேண்டும்.

அனைத்து மொழிகளையும் இணைப்பதற்கு இசை முக்கியமாக உள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை தவிர்த்து, நம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும். ஏனென்றால் நம்முடைய கலாச்சாரம், பண்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. பாரதிய வித்யா பவன், இசை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் கலாச்சாரத்தையும், கல்வியையும் சிறப்பாக கற்பிக்கின்றனர்.

ஐஐடி மெட்ராஸ் கலாச்சார பண்பாடுகளுக்கான சிறந்த மையமாக விளங்குகிறது. கலாச்சார முன்னேற்றத்திற்கு சென்னை ஐஐடியின் முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் நமது இசையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் காப்புரிமையை பெற வேண்டும். அதன் மூலம் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்.
ஐரோப்பிய நாட்டவர்களை காட்டிலும் இந்தியர்களின் சிந்தனை புனிதம் வாய்ந்ததாக உள்ளது.

இசை மற்றும் கலாச்சாரம் சார்ந்த பல ஆய்வுகளை இன்னும் நாம் மேற்கொள்ள வேண்டும். பாரதம் நமக்கானது மட்டுமல்ல, உலகத்திற்கானது. அதை நாம் போற்ற வேண்டும்.” என பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version