கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து, இன்று காணொலி காட்சி மூலம் சாட்சியம் அளிக்க உள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது சம்பந்தமான வழக்குகள், மதுரையில் உள்ள கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
இந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து, ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை அளித்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம், இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளார்.
வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய போது, தனது பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என அவர் விளக்கம் அளித்திருந்தார்.
அவர் சாட்சியம் அளிக்க போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் சகாயம், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் சாட்சியம் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, காணொலி மூலம் சாட்சியம் அளிக்க சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உள்ளார்.