தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாகவுள்ள பண்னியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில், அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப்-4 பணிகளில் 3,935 காலி இடங்கள் இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.
இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு சமீபத்தில் ஹால்டிக்கெட்டையும் வெளியிட்டது. அதன்படி, 5,26,553 ஆண்கள், 8,63,068 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13,89,738 பேர் இன்று (சனிக்கிழமை) இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் எழுதுகின்றனர். குறிப்பாக சென்னைய்ல் மட்டும் 94,848 பேர் எழுதுகின்றனர்.
இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறை, உரிய முன்னேற்பாடுகள் செய்துள்ளது.
