கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, பேரூர் செட்டிபாளையம், இந்திரா காலனிப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால், சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகளின்மை: கழிப்பறை வசதி இல்லாததால் பெரும் அவதி:
இந்திரா காலனியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இவர்களுக்கு இதுவரை எந்தவித நிரந்தரக் கழிப்பறை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடத்திலும் கழிப்பறை வசதிகள் இல்லாதது, முதியோர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை உபாதைகளுக்குக்கூட வழியில்லாத நிலை உள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள்:
இதுகுறித்து அப்பகுதிப் பொதுமக்கள் கூறும்போது, “தற்போது சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். தொடர்ந்து மழை பெய்யும் காலம் என்பதால் வேலைகளுக்குச் செல்ல முடியாது. நாங்கள் தினக்கூலி செய்து பிழைப்பவர்கள். மழையினால் வீடுகளில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டன. எங்களுக்கு உணவு, தங்கும் இடம் ஆகியவற்றை அரசாங்கம் ஏற்பாடு செய்து தர வேண்டும். மழை நிவாரண நிதி ஏதாவது கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், “தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசாங்கம் சலுகை கொடுப்பதாக செய்திகளிலும், நாளிதழ்களிலும் கூறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை. ரேஷன் பொருட்களுக்குக்கூட நாங்கள் வேலையை விட்டுவிட்டு ஒரு நாள் ரேகை வைக்கச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நிறைய திட்டங்கள் புதிதாக வருவதாகக் கூறுகிறார்கள், ஆனால் எங்களுக்கான திட்டங்கள் எதுவும் எங்களை வந்து சேருவதில்லை” என வேதனை தெரிவித்தனர்.
இந்திரா காலனி மக்கள் மாவட்ட ஆட்சியர் தங்கள் பகுதிக்கு நேரில் வந்து சந்தித்து, தங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தர வேண்டும் என்றும், பொதுக் கழிப்பிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திரா காலனி மக்களின் அவல நிலைக்கு அரசு உடனடியாக செவிசாய்த்து, நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதிப் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.