தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (மே 29) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இன்றும், நாளையும் (மே 30, வெள்ளிக்கிழமை) தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை நிலவரம்:
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
எச்சரிக்கை நிலைகள்:
அதி கனமழை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும்
கனமழை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த நிலையில்), சின்னக்கல்லாரில் 15 செ.மீ., அவலாஞ்சியில் 14 செ.மீ., சாம்ராஜ் எஸ்டேட், மேல் பவானி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தலா 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.