சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், ரூ.3 கோடியே 40 லட்சத்தை இழந்திருக்கிறார் .இதுதொடர்பான புகாரின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சத்யநாதன் (68). கடந்த ஜூலை மாதம் இவரை தொடர்பு கொண்ட ஒருவர், ‘பெங்களூரில் இருந்து ஃபையர்ஸ் செக்யூரிட்டிஸ் (Fyers Securities) அதிகாரி எனக்கூறி தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், FYERS VIP வாட்ஸ்அப் குழுவில் (WhatsApp group) தங்களை இணைத்துள்ளதாகவும், அதில் வர்த்தகம் (Trade) தொடர்பான தொழில் முறை விவாதங்கள் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி, சத்யநாதன் அந்த வாட்ஸ்அப் குழுவில் இணைந்தார்.
அப்போது, அக்குழுவில் இருந்தவர்கள் ‘FYERSHNI’ என்ற செயலியை பதிவிறக்கும்படி கூறியுள்ளனர். சத்யநாதனும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கியுள்ளார். இந்த சமயத்தில், செயலியில் வரும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என அவர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய சத்யநாதன், அந்த செயலியில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளார்.
அதன்படி, கடந்த ஜுலை 7 ஆம் தேதி, ஆன்லைன் வர்த்தக முதலீட்டாளர்கள் கொடுத்த லிங்கில் சென்று, சுமார் 13 வங்கிக் கணக்குகளுக்கு ரூ.3 கோடியே 40 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதனை பின்னர், முதலீடு செய்த பணத்தையும், அதற்கான லாபத்தையும் கேட்டபோது அவருக்கு எந்த பதிலும் அளிக்காமல் அந்த செயலியை அவர்கள் முடக்கியுள்ளனர்.
தான் ஏமாற்றமடைந்ததை அறிந்து அதிர்ந்து போன சத்தியநாதன், இதுகுறித்து தேசிய இணையவழி குற்ற போர்ட்டலில் (National Cyber Crime Reporting Portal) புகார் அளித்தார். தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவிலும் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.)
விசாரணையில், இந்த சைபர் குற்ற பின்னணியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (51) என்பவர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பாலசுப்பிரமணியத்தை கடந்த மாதம் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் (49), எப்சி (35), பஞ்சவர்ணம் (33) ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால், 3 பேரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த மூவரையும் தூத்துக்குடியில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மூவரும் சைபர் குற்றவாளிகளுக்கு தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. அதாவது, வங்கி கணக்குகள் தேவைப்படுவதாகவும், அதில் வரும் பணத்தை எடுத்து கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் கூறியதையும் நம்பி அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, மூன்று பேர் மீதும் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சைபர் கிரைம் போலீசார் அறிவுரை
- ’பொதுமக்கள் அதிக லாபம், உத்தரவாதம் எனக்கூறும் ஆன்லைன் வர்த்தக முதலீடுகள், போலியான வர்த்தக செயலிகள் மற்றும் தெரியாத வாட்ஸ்அப் குழுக்களை நம்பி ஏமாற வேண்டாம்.
- பொதுமக்களின் ஏழ்மையையும், பொருளாதார பற்றாக்குறையையும் பயன்படுத்தி, தரகர்கள் வங்கி கணக்குகளை தருமாறும், அதில் வரும் பணத்தை எடுத்துக்கொடுத்தால் நல்ல கமிஷன் தொகை தருவதாக கூறினால் நம்ப வேண்டாம். வங்கி கணக்கு விவரங்களை மோசடி நபர்களுக்கு தர வேண்டாம்.
- அவ்வாறு பணத்திற்கு ஆசைப்பட்டு வங்கி கணக்கை பிறருக்கு கொடுத்தாலும், பணத்தை எடுத்து கொடுத்தாலும் குற்றச்செயல்’ என எச்சரித்துள்ளனர்.
