ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள புதிய குடும்பச் சட்டம், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
தாலிபன்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா ஒப்புதல் அளித்துள்ள, 31 பிரிவுகளைக் கொண்ட இந்த “தம்பதியர் பிரிவிற்கான கோட்பாடுகள்” (Principles of Separation Between Spouses) என்ற புதிய சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்றால், பருவமடைந்த ஒரு பெண்ணிடம்திருமணத்திற்கான சம்மதம் கேட்கப்படும்போது, அவர் பயத்தினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அமைதியாக இருந்தால், அது அந்தத் திருமணத்திற்கு அவர் தெரிவித்த ‘சம்மதம்’ என்றே எடுத்துக்கொள்ளப்படும்.
இதே விதியின் கீழ், ஒரு சிறுவனுக்கோ அல்லது ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கோ இந்த ‘மௌனம் சம்மதம்’ என்ற விதி பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் திருமணங்களை முடிக்கும் முழு அதிகாரமும் தந்தை மற்றும் தாத்தாக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நிச்சயிக்கும் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும்.
தந்தை அல்லது தாத்தா தவிர மற்ற உறவினர்கள் சிறுவர்-சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைத்தால், அவர்கள் பருவமடைந்த பிறகு அந்தத் திருமணத்தை ரத்து செய்யக் கோரலாம். ஆனால், அதற்குத் தாலிபன்களின் மத நீதிமன்ற உத்தரவு கட்டாயம் தேவை என்று இந்தச் சட்டம் கூறுகிறது.
இந்தச் சட்டம் ஆப்கானிஸ்தானில் நிலவும் ‘பாலினப் பாகுபாட்டை’ சட்டப்பூர்வமாக்குகிறது என ஐநா மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. “குழந்தைத் திருமணத்தில் எந்தவொரு உண்மையான சம்மதமும் இருக்க முடியாது. பெண்ணின் மௌனத்தை சம்மதமாக ஏற்பது, அவர்களின் குரலையும் சுதந்திரத்தையும் முழுமையாகப் பறிக்கும் ஆபத்தான செயலாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை, வேலைக்குச் செல்லத் தடை எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தாலிபன்களின் இந்த புதிய சட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை மேலும் இருளாக்கியுள்ளது.
