சேலத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட அதிக வீரியதன்மை கொண்ட இரண்டு டன் ஜெலட்டின் குச்சிகளை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து மதுக்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை வழியாக உரிய ஆவணங்கள் இன்றி வெடி பொருள்கள் கடத்தப்படுவதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கேரளாவில் உள்ள கல்குவாரிகளில் பயன்படுத்துவதற்காக வெடிபொருள்கள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது , அந்த வழியாக வந்த பொலீரோ வாகனத்தை சோதனையிட்டனர்.
அதில் அதிக வீரியதன்மை கொண்ட 2 டன் ஜெலட்டின் குச்சிகள் உட்பட வெடிமருத்துகள் உரிய அனுமதி இல்லாமல் கேரளா கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது
தீவிரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான குழு அதிகாலை 4 மணியளவில் அந்த வாகனத்தைப் பிடித்து மதுக்கரை காவல் நிலையத்தில்
ஒப்படைத்தனர்.
தீவிரவாத தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஜோசப் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மதுக்கரை போலீசார் ஜெலட்டின் குச்சிகளுடன் வந்த வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க பணிகளுக்காக வெடிபொருட்களை கொண்டு சென்று சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த ஓட்டுனர் சுபேர் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிபொருள்கள் எங்கு இருந்து கொண்டு வரப்படுகிறது, கேரளாவில் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பன உள்ளிட்ட தகவல்களை அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மதுக்கரை காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு , வெடிமருத்து கொண்டு வரப்பட்ட வாகனத்தில் இருந்த வெடிபொருட்களை காவல்துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தினர். தமிழக கேரள எல்லைப் பகுதியில் இரண்டு டன் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
