தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. அந்த வகையில் அமமுக, அன்புமணியின் பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவித்திருந்தது. என்.டி.ஏ. கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை நேற்று (15.12.2025) முதல் பெறலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதனை பலரும் வாங்கிச் சென்றனர்.
டிசம்பர் 23 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை அதிமுக வழங்கவுள்ளது. தமிழகத்தில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெற 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 5000 ரூபாயும், கேரளாவிற்கு 2000 ரூபாயும் விருப்பமனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, முதல் நாளான நேற்று (டிச.15) சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தின் எம்.ஜி.ஆர். மாளிகையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மொத்தம் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், கட்சியின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 349 விருப்ப மனுக்களும்; கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள், தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி 888 விருப்ப மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, தென் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தின் முகமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி தென் தமிழகத்தில் களமிறங்குவாரா என்றும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.
