அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பதில் தவறு கிடையாது. தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை விளக்குவார் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரசும் உள்ளது. தி.மு.க. கூட்டணி மிகவும் கட்டுக்கோப்பாக உள்ளது. மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல, ஒட்டு மொத்தமாக மக்களின் கோரிக்கை. இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. புள்ளி விவரங்கள் இந்த உண்மையை தெரிவிக்கிறது.
தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சி மாநாட்டில் வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம். அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. மறுபடியும் ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன். இளைய தலைமுறையை பாதுகாக்க வேண்டும், தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். எனவே மது மற்றும் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்கும், முற்றிலுமாக ஒழிப்பதற்கும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முன்வர வேண்டும்.
இந்த பட்ஜெட்டில் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொடுத்த தொகையை மக்கள் செலுத்தவில்லை என கூறுகிறீர்கள். இது குறித்து அரசு தான் கவலைப்பட வேண்டும். இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி நிதி கொடுத்து இந்த ஒன்றிய அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதைப் பற்றி இந்த நாடு கவலைப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்பது பேச்சுவார்த்தையில் முடிவாகும். அவ்வாறு அவர்கள் கேட்பதால் கூட்டணி உடையாது.
உழைக்கிறோம், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது. தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை அவர் விளக்குவார். எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். தி.மு.க. கூட்டணியில் பிரச்சனை இல்லை என்றார்.
