கன்னியாகுமரி மாவட்டம் கடுகுவிளை கிராமத்தைச் சேர்ந்த அல்போன்சாள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது தாயார் சூசைமரியாள். கடந்த ஜூலை 29ஆம் தேதி காலை 5 மணி அளவில் நான்கு காவலர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி, எனது அண்ணியின் மகன் சாகித் ஜெட்லியை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
அவனை வலுக்கட்டாயமாக தாக்கி இழுத்துச் சென்ற நிலையில், எனது தாயாரும் சாகித்தின் தாயாரும் விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளனர். அப்போது என் தாயாரை காவலர்கள் தள்ளிவிட்டு காலால் தாக்கியுள்ளனர். இதனால் கீழே விழந்ததில், நினைவின்றி, அசைவற்றுக் கிடந்த எனது தாயாரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. காவல்துறையை சேர்ந்தவர்கள் தள்ளிவிட்டு காலால் தாக்கியதே எனது தாயார் உயிரிழக்க காரணம்.
ஆகவே இதில் தொடர்புடைய அனைத்து காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்வதோடு, எனது தாயாரின் மரணம்க் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யவும், இடைக்கால நிவாரணம் வழங்கவும், உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “இன்றே உயிரிழந்த சூசைமரியாளின் உடலை முறையாக உடற்கூறு ஆய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் செய்யவும் உத்தரவிட்டார். மேலும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின் சூசை மரியாளின் உடலை பெற்றுக்கொள்ள மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
