பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் உரிய தண்டனை வழங்கப்பட்டது போல் விரைவில் கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போதே பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பேசினேன். இப்போது நான் சொன்னது போலவே தீர்ப்பு வந்திருக்கிறது” என்று கூறினார். மேலும் “இதே போல் கோடநாடு வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய தண்டனை விரைவில் வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி எதற்காகச் சந்தித்தார் என்பது நாட்டுக்கே தெரியும். ஆனால் தான் சொல்லித்தான் 100 நாள் வேலைத் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்று கூறி வருகிறார். இப்படி பொய் சொல்லி பித்தலாட்டம் செய்வதுதான் அவருக்கு வேலையாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் திமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார் என்று அனைவருக்கும் தெரியும்” என்று பேசினார்.

உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெறவுள்ள 127-வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 15) திறந்து வைக்கவுள்ளார். நாளை முதல் மே 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version