சபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக இன்று (மே 14) மாலை திறக்கப்படுகிறது.
கேரளாவின் புகழ்ப்பெற்ற வழிபாட்டுத் தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உட்பட நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலில் மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதுண்டு. இந்த நிலையில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
இன்று (மே 14) முதல் 5 நாட்களுக்கு கோயில் நடை திறந்திருக்கும். கோவில் தந்திரிகள் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையைத் திறக்கவுள்ளார். அப்போது சிறப்பு தீபாராதனை மற்றும் பதினெட்டாம் படியின் கீழ்ப் பகுதியில் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐயப்பனுக்கு நாளை (மே 15) அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வரும் 19-ம் தேதியுடன் மாதாந்திர பூஜைகள் நிறைவடையும் நிலையில், அன்றிரவு கோவில் நடை சாத்தப்படும்.
சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.