உலகில் 2.5% ஆக  இருக்கும் விலங்குகளின் எண்ணிக்கையில் வெறும் 0.01%  மட்டுமே இருக்கும் மனிதன், இந்த இயற்கைக்குச் செய்யும் தீங்கு எண்ண முடியாமல் நீள்கிறது. மனிதன் தன் தேவைக்காக மரங்களை வெட்டுகிறான்,  காடுகளை அழிக்கிறான்,  மலைகளைச் சரிக்கிறான்,  நதிகளை தூர்க்கிறான்,  கடல் மட்டத்தை அதிகமாக்கிக் கொண்டிருக்கிறான். இதெல்லாம் ஏதோ பெருமளவில் நடந்து கொண்டிருக்க, நாம் இதற்கு சற்றும் சளைக்காமல் குப்பை போட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி நாம் போட்ட குப்பைகளால்தான் கோவையில் ஒரு யானை உயிரிழந்திருக்கிறது. 

வனங்கள் குப்பை மேடுகளா? 

திடக்கழிவு மேலாண்மையில் அரசு முக்கியத்துவம் காட்டி வந்தாலும், பெரும்பாலான குப்பைகள் நீர் நிலைகளிலும் காட்டுப் பகுதிகளிலுமே கொட்டப்படுகின்றன. குறிப்பாக கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளிளின் அடிவார ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் வனப்பகுதிகளின் ஓரத்தில்தான் கொட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இரவில் உணவு தேடி வரும் விலங்குகள், குப்பை மேடுகளிலிருந்து பொறுக்கி உண்ணும் அவலம் நிகழ்கிறது. நாம் போடும் குப்பைகளால் என்றைக்கோ எங்கேயோ நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, மிக அருகிலேயே காட்டு யானை ஒன்று போராடி பலியாகியுள்ளது. 

என்ன நடந்தது யானைக்கு? 

கோவை மாவட்டம் மருதமலை அருகே மணப்பகுதியில் பெண் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது.  வெயில் களைப்பில் சோர்ந்த்திருக்கலாம் எனக் கணித்த வனத்துறையினர், கடந்த 17ஆம் தேதி யானைக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.  நடமாட முடியாமல் நிலத்தில் படுத்து விட்ட யானையை எழுப்ப அதன் குட்டி ஒரு பாச போராட்டமே நிகழ்த்தியது. அதைக் கும்கி யானை துணையோடு காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர் சிகிச்சையைத் தொடர்ந்தனர். 

யானைக்கு ஹைட்ரோதெரபி 

பெண் யானையின் உடல் நலம் கொஞ்சம் தேறிய நிலையில், புதிய ஹைட்ரோதெரபி மூலம் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டது.  அதாவது,  வனப்பகுதியில் தற்காலிகமாக குட்டை ஒன்றை அமைத்து,  அதில் 18000 லிட்டர் தண்ணீர் நிரப்பி யானையை அதில் படுக்க வைத்து சிகிச்சை மேற்கொண்டனர்.  அந்த யானைக்கு காது வழியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது. இந்த முயற்சியில் ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று அந்தக் காட்டு யானை உயிரிழந்தது. 

உடற்கூறாய்வில் வெளிவந்த உண்மை

இதை எடுத்து உயிரிழந்த யானையின் உடல் இன்று உடற்கூறாய்வு செய்யப்பட்டது.  அதைச் செய்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். யானையின் வயிற்றுக்குள் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள் எடுக்க எடுக்க வந்துகொண்டே இருந்திருக்கிறது. மலக்குடல், மூச்சுக்குழாய், உணவுக்குழாய் என முக்கிய உறுப்புகளையெல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்திருக்கின்றன. வயிற்றில் தங்கியிருந்த சாணத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும், யானையின் கர்ப்பப்பையில் 15 மாதங்கள் நிரம்பிய, நன்கு வளர்ச்சி அடைந்த ஆண் யானைக் குட்டி ஒன்றும் இருந்திருக்கிறது. வயிற்றில் குட்டி இருப்பது தெரியாமல் மருத்துவர்கள் ஹைட்ரோதெரபி செய்ததில், அது இறந்திருக்கிறது. 

மருத்துவர்களின் விளக்கம் 

உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் “அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதால் நுண்ணுயிர் தாக்கி யானைக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம். யானையில் வயிற்றில் அதிகளவில் புழுக்களும் காணப்பட்டன. யானையின் உடலில் சிசு இருந்ததைக் கண்டுபிடிக்கும் கருவி இல்லாததால் யானைக் குட்டி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. யானையின் சானத்தில் அதிகளவில் அலுமினியம் ஃபாயில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்பட்டன. பிளாஸ்டிக் துகள்கள் மூச்சுக் குழாயையை அடைத்ததால் அதற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது” என்று தெரிவித்தனர். 

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 123 யானைகள் உயிரிழந்துள்ளன. அவற்றில் இயற்கையான முறையில் 107 யானைகள் இறந்த நிலையில், இயற்கைக்கு மாறான முறையில் 16 யானைகள் பலியாகியுள்ளதாக கூறுகிறது வனத்துறை. இதுவே இயற்கை மீதான நம் அக்கறையைக் கேள்விக்குறி ஆக்குகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version