உடன் வந்த தாயார் 25 பேரின் எச்சரிக்கையையும் மீறி,ஆபத்தான பகுதியில் சென்று குளித்ததால் நேர்ந்த விபரீதம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குரங்கணி மலைக் கிராமம்.கேரள எல்லையை ஒட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள இப்பகுதிக்கு டாப் ஸ்டேஷன், முதுவாக்குடி,சென்ட்ரல்,முட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து மழை நீர் மற்றும் காட்டாற்று வெள்ளநீர் வழிந்து இப்பகுதியில் அருவியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்து குளித்து தொடர்ந்து விபத்துகளில் சிக்கியதால் இப்பகுதியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.இதனையும் மீறி வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று காலை கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி தனது குடும்பத்தினர் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோருடன் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர்.
25 பேரும் குரங்கணி காவல் நிலையம் பின்புறம் உள்ள தடை செய்யப்பட்ட குரங்கணி அருவியல் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது புஷ்பரதியின் மகன் தினகர் (25) அருவியின் மேல் பகுதிக்கு ஏறிச் சென்றுள்ளார்.புஷ்பரதி உள்ளிட்ட அனைவரும் எச்சரித்தும்,மேலே ஏறிச் சென்ற தினகர் நீண்ட நேரமாக கீழே திரும்பி வரவில்லை.
இதனால் அச்சமடைந்த புஷ்பரதி உடனடியாக குரங்கணி காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். காவல்துறையினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்து வரவழைத்தனர்.இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் ஆபத்தான மலைப்பகுதியில் ஏறி,அங்கு தேங்கி இருந்த நீரில் சுமார் ஒரு மணி நேரம் தேடுதல் நடத்திய பின்னர் 10 அடி ஆழ நீர் தேக்கப்பகுதியில் இருந்து தினகர் சடலமாக மீட்கப்பட்டார்.அவரது உடல் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்ற நிலையில்,பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குரங்கணி காவல் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தாலும் எந்த ஒரு எச்சரிக்கை பலகைகளும், தடுப்புகளும் அமைக்காத நிலையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் அடிக்கடி இங்கு வந்து குளித்து விபத்தில் சிக்கி இதுபோல உயிரிழப்பு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இனிமேலாவது தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வந்த நிலையில்,இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ..