தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அட்டவணை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இன்று (மார்ச் 15) காலை 11 மணி அளவில்  தலைமை தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) வெளியிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சில மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் தயார் நிலை குறித்த கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதால், இந்த அறிவிப்பு வெளியாவதில் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்குச் சென்று தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து முடித்துள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் தேர்தல் அமைதியாக நடப்பதை உறுதி செய்ய கூடுதல் பாதுகாப்புப் படைகளை அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தற்போது வாக்குச்சாவடிகள் அமைப்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தயார் நிலை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முழுமையாக முடிந்துள்ளதால், தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் தேதிகளை அறிவிக்கலாம் என்ற நிலையில் உள்ளது.

நடப்புத் தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 10 அன்றுடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் மாத இறுதிக்குள் அல்லது மே மாதத் தொடக்கத்தில் தேர்தலை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டைப் போலவே, இந்த முறையும் கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதா அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காகப் பல கட்டங்களாக நடத்தப்படுமா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே தெரியவரும்.

அதேபோல் தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 37 மாநிலங்களவை இடங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் 26 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மீதமுள்ள 11 இடங்களுக்கு போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version