தொடர் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்து, கிலோ ரூ.2,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்திற்கு மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி, பாலமேடு, சோழவந்தான், மேலூர், கொட்டாம்பட்டி, வலையங்குளம், திருமங்கலம், திருப்பரங்குன்றம், கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
அதேபோல், மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த மதுரை மல்லியின் மணம், தடித்த காம்பு, நீடித்த தன்மை காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் நிலவும் தொடர் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மலர் சந்தைக்கு வரும் மல்லிகை பூவின் வரத்து குறைத்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்ததால், விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லி விலை அதிகபட்சமாக கிலோ ரூ.2 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பாக மதுரை மல்லி கிலோ ரூ.800-க்கும் விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ.2 ஆயிரத்து 800-க்கும் விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், “பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. மதுரை மல்லிகை வரத்து குறைவாக உள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாக உள்ளது. வரத்து குறைவால் விலையும் அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் இதே விலை நிலவரமே நீடிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
