இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே வங்கி கணக்கிற்கு வரும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது.
இருப்பினும் தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த புதிய பயனாளர்களை கண்டறிந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அந்தவகையில் அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை வழங்க திட்டமிட்டது.
அதன்படி ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 15, 2025 அன்று தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான மனுக்கள் ஏற்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இதற்காக, நவம்பர் 15 வரை நடைபெற்ற இந்த முகாம்களில், உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக களஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த பணி நவம்பரில் முடிவடையும் எனவும் முகாம்களில் விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதல்வர் முடிவெடுத்துள்ளதாகவும் சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகாசியில் மேயர் சங்கீதா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “கடந்த 27 மாதங்களாக ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த மாதம்12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், மேலும் பலருக்கு வழங்கப்பட உள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் முதன்முதலில் தமிழகத்தில் பெண் காவலர்களை நியமித்ததே கலைஞர்தான். மகளிர் கட்டணமில்லா மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட மகளிர் வளர்ச்சி திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது” என்றும் மகளிர் முன்னேற்றத்திற்கு இந்த அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
