மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாக அக்கட்சியின் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு…
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டின் முதன்மை நோக்கம் சமூகநீதி தான். அதை வலியுறுத்தி தான் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; அதேபோன்று அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2% உயர்த்த வேண்டும்; இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும்; மேலும் தனியார் துறை மற்றும் உயர்நீதித் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து சமூகங்களுக்கும் நிதி அதிகாரம் கொண்ட வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்; மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; வளர்ச்சிக் குறியீடுகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கான முழக்கங்கள் இந்த மாநாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. ஏழரை கோடி மக்களின் இந்த உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொண்டு அதனடிப்படையில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஆணையிட வேண்டும். அதனடிப்படையில் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதுடன், வன்னியர்களுக்கும், மற்ற அனைத்து சமுதாயங்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் அளவை மேலும் 2% உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதேபோல், கல்வி, வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு மற்றும் கிரீமிலேயரை அகற்றுதல், தனியார்துறை மற்றும் உயர்நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.