ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கான அரசு மக்கள் குறைதீர் முகாம், பெருந்துறையில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் டி.பி. விஜய் பாலாஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டனர்.
முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றதால் பெரும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
மனுக்களை நேரடியாக அமைச்சர்களிடம் வழங்க பொதுமக்கள் முந்தியடித்துச் சென்றதால், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியதைத் தொடர்ந்து மனுக்கள் பெறும் பணி வழக்கம்போல் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை வீட்டுமனைப் பட்டா தொடர்பான கோரிக்கைகள் என தெரிவித்தார். ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை தாமதமின்றி வழங்கும் நோக்கில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை ஆணையராகக் கொண்டு தனி பட்டா விநியோக வாரியம் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், மாநிலம் முழுவதும் நில அளவீட்டு பணிகளை விரைவுபடுத்தவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பட்டா விண்ணப்பங்களுக்கு தீர்வு காணவும், வருவாய்த்துறை மூலம் தற்காலிக அடிப்படையில் 1,000 நில அளவையர்கள் (Surveyors) நியமிக்கப்பட உள்ளனர் என்றார். பூஜ்ஜிய மதிப்பு (Zero Value) நிலங்கள், நத்தம் நிலப் பிரச்சினைகள் உள்ளிட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காணப்படும் என்றும், இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 9 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
முகாமில் குடிநீர் தட்டுப்பாடு, வடிகால் வசதி, கூட்டுப் பட்டா உட்பிரிவு, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் நிலத்தடி நீர் மாசுபாடு, அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை விடுபட்ட குளங்களுக்கு விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டன.
சிப்காட் பகுதியில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சிப்காட் வளாகத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மழைநீர் சேமிப்பு மூலம் நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைப்பது தொடர்பாக அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறினார்.
கரூர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அந்த விவகாரம் தற்போது சிபிஐ விசாரணையிலும் நீதிமன்றத்தின் பரிசீலனையிலும் இருப்பதால், அதுகுறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது” என்று தெரிவித்தார்.
மேலும், மாநில அரசின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அவசர அடிப்படையில் இந்த மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டதாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தாலுகா வாரியாக மக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதில் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, “அரசு நிர்வாகத்தில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் அல்லது ஊழல் இருக்கக் கூடாது” என்ற கொள்கையுடன் அரசு செயல்பட்டு வருவதாகவும், தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
முன்னதாக, மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்ற மேடையில் தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள் அதிகளவில் அமர்ந்திருந்ததால், அரசு அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்களை பெறுவதிலும், நிகழ்ச்சியை ஒழுங்காக நடத்துவதிலும் சிரமம் ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
