தேனியில் தனது கணவர் மற்றும் மாமனாரிடம் இருந்து தனது 15 பவுன் நகையை மீட்டு தர கோரி,தனது ஆறு வயது மகளுடன் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குருதேவி (26) இவருக்கும் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரத்தை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை இருக்கின்றது.
திருமணத்திற்கு பிறகு சின்னமனூரில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் குருதேவி தனது ஆறு வயது மகளுடன் தனது தந்தை வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்த தனது 15 பவுன் நகையை கேட்டபோது தனது மாமனார் செல்லக்கண்ணு மற்றும் கணவர் தன்னை மிரட்டி தனது நகையை கொடுக்காமல் அபகரித்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண் தனது ஆறு வயது குழந்தையுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணை தடுத்து,தாய் மற்றும் மகள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.மேலும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது 15 பவுன் நகையை மீட்டு தரக்கோரி சின்னமனூர் காவல் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்த நிலையில், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்து வருவதாக புகார் தெரிவித்த பெண் தனது கணவரிடம் இருந்து தனது நகையை மீட்டு தர வலியுறுத்தி கோரிக்கை வைத்தார்.