இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்திலும் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பயணிகள் அதிகரிப்பு, பாதுகாப்பு சவால்:
கோவை விமான நிலையம், சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி போன்ற வெளிநாடுகளுக்கும், மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகளை வழங்குகிறது. விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமான நிலைய ஆணையத்தின் தகவல்படி, கடந்த நிதியாண்டில் 32.53 லட்சம் பயணிகள் கோவையிலிருந்து பயணம் செய்துள்ளனர். இது முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் 12% அதிகம்.
மர்மப் பையால் பரபரப்பு:
இந்நிலையில், நேற்று கோவை விமான நிலையத்தில் அனாதையாக ஒரு பை கிடந்துள்ளது. இதைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) உடனடியாக உஷாராகினர். இந்தப் பைக்குள் ஏதேனும் வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில், மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு அந்த பையை தீவிரமாகச் சோதனை செய்தனர்.
பின்னர், அந்த பையை உள்ளே கொண்டு சென்று ஸ்கேன் செய்தனர். சோதனையில் பைக்குள் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதியானது. யாரோ ஒரு பயணி தவறுதலாக அந்த பையை விட்டுச் சென்றிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் கருதினர். பையை இழந்தவர்கள் புகார் அளித்தால், திருப்பிக் கொடுப்பதற்காக அதை எடுத்துச் சென்றனர். கோவை விமான நிலையத்தில் தனியாகக் கிடந்த இந்தப் பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.