திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பி.காம்., பிரிவில் உள்ள ’இண்டஸ்ட்ரியல் லா’ தேர்வு வினாத்தாள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கசிந்தது. இதனால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து புதிய வினாத்தாள் தயார் செய்யப்பட்டு நேற்று (30.05.2025) நடைபெற்று முடிந்தது. வினாத்தாள் கசிவு குறித்து குழு அமைத்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை பேட்டை காவல்துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.