தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் இன்று மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, வில்லிவாக்கம் மற்றும் டி.நகர் பகுதிகளில் தலா ஒரு மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால், அந்த கால அவகாசம் போதுமானதாக இருக்காது எனக் கருதி விஜய் தனது பயணத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளார்.
குறைந்த நேர ஒதுக்கீடு குறித்து மீண்டும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட விஜய் முடிவெடுத்துள்ளதாகவும், உரிய அனுமதி கிடைத்த பிறகு புதிய அட்டவணைப்படி மீண்டும் பிரச்சாரம் தொடங்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்ட நிலையில், இந்தத் தொடர் ரத்து நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
