பொங்கல் பரிசுத் தொகை தொடர்பான அறிவிப்பை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. அதாவது, கடந்த 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவும், அடுத்தடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பச்சரி மற்றும் கரும்பு உள்ளிட்ட தொகுப்புடன், ரூ.1000 ரொக்கமும் வழங்கினர். ஆனால், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகுப்பில் ரொக்கம் இடம்பெறாதது ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தான் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை நிச்சயம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கமும் இடம்பெறும் என்றும், ரூ.5000 வரை வழங்கப்படலாம் என்றும் எதிர்க்கட்சிகள் யூகிக்க, பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.
பச்சரிசி, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிற்கான அறிவிப்பு வெளியாகி, டோக்கன் விநியோகமும் தொடங்க உள்ள நிலையில், ரொக்கப் பணத்திற்கான அறிவிப்பு மட்டும் வெளியாகமல் உள்ளது. இந்த சூழலில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்படி, பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, ஒவ்வொரு அட்டைதாரருக்கும் ரூ.3000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என கூறப்படுகிறது. தொடர்ந்து, சென்னையில் வரும் 8ம் தேதி அன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
