சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்களித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 – 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
பின்னர், செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் விசாரித்தார். பொன்முடி தரப்பில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வாகவும், திமுகவின் செயற்குழு உறுப்பினராக இருப்பதால் சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் தனக்கு வழங்கபட்டிருப்பதையும், தனது வயதையும் கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பொன்முடி தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களித்து இன்று உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.