வீடுபுகுந்து இளைஞரை கடத்திய வழக்கில் தொடர்புடையதாக எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி மீது புகார் எழுந்த நிலையில், முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியை சேர்ந்த பெண்ணை சமூக வலைதளம் மூலம் பேசி பழகி, காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கூலிப்படையை ஏவி இளைஞரின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். அத்தோடு வீட்டில் இருந்த இளைஞரின் சகோதரனையும் அந்த கும்பல் கடத்தி சென்று, சிறிது நேரம் கழித்து வீட்டிலேயே விட்டு சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கும் தொடர்புடையதாக புகார் எழுந்தது. அவர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் பெண்ணின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பூந்தமல்லியில் உள்ள பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் சென்ற போது, அவரது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வீட்டில் பூவை ஜெகன் மூர்த்தி இல்லாததால் போலீசர் திரும்பினர். தற்போது அவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனக்கு முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என பூவை ஜெகன் மூர்த்தி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி வேல்முருகன் முன்பு பூவை ஜெகன்மூர்த்தி தரப்பு வழக்கறிஞர் வேல்முருகன் முறையீடு செய்தார். ஆனால் நீதிபதி பி.வேல்முருகன் நாளை(16.062025) விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.