வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று நாடு திரும்புகிறார். 5 நாடுகளுக்கு 8 நாட்கள் அரச முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து கானா, டிரினிடாட், அண்ட் டொபாக்கோ, அர்ஜெண்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு சென்று, அந்தந்த நாட்டின் தலைவர்கள் மற்றும் அதிபர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
8 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார் பிதமர் மோடி. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உட்பட பல கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டு பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மண்டல மாநாடு கழகத்தில் 7 இடங்களில் நடத்தப்படவுள்ளது. முதலாவதாக அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 27, 28-ம் தேதிகளில் பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் அவர் அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் என பலர் கங்கை கொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதனிடையே பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஜூலை 26-ம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஜனவரி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை 7 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
